ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம்

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாசி மகத்தினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் இன்று நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை ஆலயத்தில் விசேட யாக பூஜை நடைபெற்று மூலமூர்த்தி மற்றும் அம்பாளுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்றைய மாசி மக பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது மூலமூர்த்தி மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட தீபாராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெற்றது.

கொரனா அச்சுறுத்தல் நிலவும் காலம் என்ற காரணத்தினால் பக்தர்கள் வரையறுக்கப்பட்டு சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது நாட்டு மக்கள் கொரனா தொற்றில் இருந்து விடுபடவும் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டு சிறப்புற வாழவும் நாட்டில் நீடித்த அமைதியும் சாந்தியும் நிலவவும் விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.