மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் வருட இறுதி ஒன்றுகூடலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் வருட இறுதி ஒன்றுகூடலும் இன்று நடைபெற்றது.

சமூக பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பு (SEDF) மற்றும் யு.எச்.எப் அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வைஎம்சிஏ மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சமூக பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பின் தலைவி திருமதி ஜே.ரஜிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தொழிற்பாட்டு பணிப்பாளர் கே.எம்.எம்.நிவாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சமூக பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பு (SEDF)வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடனடி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கோடு தொடர்ந்து களத்தில் நின்று சேவை செய்து வருகின்றது. அதோடு மட்டுமல்லாது, இளைஞர்களின் திறன் விருத்தி மற்றும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த சமூகப் பயணத்தின் மற்றுமொரு முக்கிய அங்கமாக, சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், குறிப்பாக அவர்களின் கற்றல் சூழல், கல்வி வளர்ச்சி, மற்றும் எதிர்கால கனவுகளுக்கு உறுதுணையாக நிற்கும் வகையில் இன்றைய நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பெருமளவான சிறுவர்கள் கலந்துகொண்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.