மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு கொலை அச்சுறுத்தல் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் முறைப்பாடு பதிவு



மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு கொலை அச்சுறுத்தல்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் முறைப்பாடு பதிவு

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் ஊடகத் துறையிலும் பொதுமக்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவர், ஊடகவியலாளருக்கு நேரடியாக தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கடந்த தினங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு 12.30 மணியளவில் குறித்த நபர்களில் ஒருவர் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து, உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொலை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில், இன்றைய தினம் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 மேலும், தன்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், குறித்த அச்சுறுத்தல் விடுத்த நபர்களே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலகாலமாக ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் தமது தொழில்சார்ந்த கடமைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்தி வெளியீடு காரணமாக அச்சுறுத்தப்படுதல், தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுதல், கடத்தப்படுதல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது ஊடக சுதந்திரம் தொடர்பான பெரும் கவலைக்குரிய நிலையாக பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவர்கள் பயம் இன்றி சுதந்திரமாக தமது ஊடக பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் தேவையான பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.