மட்டுநகரிலுள்ள முன்னணி ஆரம்பப் பாடசாலைகளுள் ஒன்றாகக் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம் விளங்கி வருகின்றது. தனது வரலாற்றில் எண்பது வருடங்களை வெற்றிகரமாகக் கடந்து 81 ஆவது அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும் இப்பாடசாலையின் கடந்த சில தசாப்தகால வரலாற்றில் மட்டுநகரின் புகழ்பூத்த, ஆசிரிய சிரோன்மணி திரு செல்வநாயகம், திரு கந்தசாமி, திரு சின்னத்துரை, திரு விஸ்வலிங்கம், திரு அருமைத்துரை முதலான அதிபர்கள் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி இப்பாடசாலையினை முன்னணி நிலைக்கு இட்டுச் சென்றார்கள். இவர்களின் பாதையினைப் பின்பற்றி இன்றைய அதிபர் திருமதி சங்கீதா கில்பட் அருள்தாஸ் அவர்கள் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.
மட்டுநகரிலுள்ள முன்னணிப் பாடசாலைகளுக்கு இடைநிலை, உயர்நிலை வகுப்புகளில் பாடவிதானங்களிலும், இணைப்பாடவிதானங்களிலும், நல்லொழுக்கத்திலும் உச்ச பேறுகளை ஈட்டிக் கொடுக்கத்தக்க மாணவர்களை ஆரம்பப் பிரிவில் நன்கு பட்டை தீட்டிப் பகிர்ந்தளிக்கும் சிறப்பான ஓர் ஆரம்பப் பாடசாலையாக இப்பாடசாலை விளங்கி வருகின்றது எனலாம்.
இத்தகைய முன்னேற்றகரமான விருத்தியைக் கடந்த பல தசாப்த காலமாகத் தொடர்ந்து தக்க வைத்து வருவதே இப்பாடசாலையின் சாதனையாக இருக்கின்றது. இந்தச்சாதனைகள் இப்பாடசாலையில் இருக்கின்ற, கிடைக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டே நிகழ்த்தப்பட்டு வருவது கவனத்திற்குரியது. இங்குதான் இப்பாடசாலையின் அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும் கடமையாற்றிய, கடமையாற்றுகின்ற நபர்களின் சிறந்த ஆளுமையினை நாம் கண்டுகொள்ள முடிகின்றது.
இவ்வாறு மட்டுநகரின் கவனிப்பிற்குரிய கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா கடந்த 2025 டிசம்பர் மாதம் 21 ஆந் தேதியன்று மட்டக்களப்பு அரசடி மகாஜன கல்லூரி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
2024, 2025 ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற பிள்ளைகளின் பெற்றார்களினது அனுசரணைகள், பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்கான வருடாந்த ஒதுக்கீடுகள் என்பவற்றின் துணையுடன் நன்கு திட்டமிடப்பட்டு இப்பரிசளிப்பு விழா நடாத்தப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும், விழாக் குழுவினரும், ஆசிரியர்களும் அதிபரின் ஒருங்கிணைப்பில் சிறப்பாகச் செயலாற்றிக் குறித்த பரிசளிப்பு விழாவை வெற்றிகரமாகவும், முன்மாதிரியான விதத்திலும் நடத்தியிருந்தார்கள்.
கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்திலிருந்து அரசடி மகாஜன கல்லூரி மண்டபத்திற்குப் பொருள்களைக் கொண்டு சென்று ஒழுங்கமைப்புகளைச் செய்து பரிசளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்திவிட்டு மீண்டும் கொண்டு சென்ற பொருள்களை கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பித்தது வரை ஆசிரியர்களினதும், பெற்றார்களினதும் பங்குபற்றுகை மெச்சும்படியாக இருந்தது.
பரிசளிப்பு விழாவிற்கு முதன்மை அதிதியாக வருகைதந்த மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.ரவி அவர்களையும் ஏனைய அதிதிகளையும் பாடசாலையின் மேலைத்தேய இசையணி சிறப்பாக அழைத்துச் சென்றதுடன், பரிசளிப்பு விழாவின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தொய்வின்றிக் கச்சிதமாக இடம்பெற்றிருந்தன.
தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பான நிகழ்ச்சித் தொகுப்பாக்கம் நடைபெற்றிருந்தது. மாணவர்கள் வகுப்பு ரீதியாகச் சிறந்த கலை நிகழ்ச்சிகளை ஆற்றுகை செய்திருந்தார்கள். குறிப்பிட்ட நேர வரையறைக்குள் இப்பரிசளிப்பு விழா இனிதாக நிறைவடைந்திருந்தது.
ஒரு பாடசாலையில் வழமையான கற்றல் செயற்பாடுகளுடன் பருவங்களுக்கு நடைபெறும் விழாக்கள் ஒவ்வொன்றும் மாணவர்களின் ஆளுமையை விருத்தியுறச் செய்பவையாக இருக்கின்றன என்ற கருத்தின் புரிதலுடன், கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு விழா கவனத்திற்குரியதாக இருந்தது எனலாம்.
து.கௌரீஸ்வரன்
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)



.jpeg)
.jpeg)

.jpeg)
