மேய்ச்சல்தரை காணிகளை அபரிக்கும் பெரும்பான்மையினத்தவர்கள் -தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அபகரித்துவருவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலத்தமடு,மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் மேய்ச்சல் தரைகளில் கால்நடைகளை வளர்த்துவருவதாகவும் சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாகிவருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன் கால்நடை வளர்ப்போருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதிக்கு வந்து அச்சுறுத்தும் பெரும்பான்மையினத்தவர்கள் மீது கால்நடையாளர்கள் தாக்குதல்கள் நடாத்தினால் அது இனவன்முறையாக மாறும் நிலையும் உருவாகலாம் எனவும் கால்நடை வளர்ப்பில் ஈடுவோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தங்கள் பகுதிக்குள் நுழைந்து பெரும்பான்மையினத்தவர்கள தமது கால்நடைகளை சுடுவதுடன் கால்நடைகளை பிடித்துச்செலலு{ம் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் அவை தொடர்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிடும்போது எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் தமது கால்நடைகளை வளர்த்துவருவதாகவும் குறித்த பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் 400க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக இருப்பதுடன் கால்நடைகளுக்கும் நீரைப்பெற்றுக்கொடுப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பிரச்சினைகளை தீர்க்க உரிய தரப்பினர் விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.