துறைநீலாவணை பிரதான வீதியில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை களவிஜயத்தின் பின் தீர்மானம்.

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் முயற்சியினால் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபைக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் கழிவுகளைக் கொட்டுகின்றவர்களை அடையாளம்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

அண்மைக்காலமாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லை பகுதியான பெரிய நீலாவணையிலிருந்து துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்படும் குளக்கரையின் ஓரமாக மிருகக் களிவுகள் உட்பட திண்மக் களிவுகளை தொடர்ச்சியாக சிலர் வீசி வருவதோடு, குழத்தினை அண்டிய சூழலினை மாசுபடுத்தும் செயற்பாட்டினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக  இவ்வீதியானது அம்பாரை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையின் நிர்வாக  எல்லைக்குட்பட்டதாகவும், துறைநீலாவணைக்கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்  நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளதன்  காரணத்தினாலும் இங்கு கொட்டப்படும் கழிவுககள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில் பல சிக்கல்கள் நிலவி வந்தன.

இந்நிலையில் இப்பிரச்சினையினை தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து குறித்த இரு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் அப்பகுதிகளுக்கு பொறுப்பான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடலிற்கு பின் இன்று (04.06.2020) குறித்த பிகுதிக்கு கள விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டது.


மேற்படி களவிஜயத்தில் போது, இவ் வீதியில் கழிவுகளை கொட்டுகின்ற நபர்களை விசேட அதிரடிப்படையினர், பொலிஸ்‌ மற்றும் பொது மக்களின் உதவியுடன் கைது செய்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தும், அதேவேளை கல்முனை மாநகர சபை மற்றும் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைகளின் ஆலோசனையுடன், தனியார் நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடன் கண்காணிப்பு காமராக்களை பொருத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படிக்கள விஜயத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச வைத்திய அதிகாரி கிருஸ்ணகுமார், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து, மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் வாலிபர்  முன்னணியின் செயலாளர் க.சசீந்திரன், களுவாஞ்சிக்குடி மற்றும் கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இவ்வீதியில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக பலரிடத்திலும் முறையிட்டும் உதாசினப்போக்கினைக் கடைப்பிடித்து வந்துள்ள நிலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு முதல்வருக்கு துறைநீலாவணை மக்கள் தமது நன்றியினையும் தெரிவித்தனர்.