வெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்

(ரஞ்சன்)
யானையின் அச்சுறுத்தலில் இருந்து தமது வயலை பாதுகாப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பினால் அதே வயலின் விவசாயி உயிரிழந்த துயரச்சம்பவம் இன்று அதிகாலை வெல்லாவெளி பகுதியில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணி பகுதியில் உள்ள வயல்வெளியில் இன்று அதிகாலை மின்சாரத்தினால் தாக்குண்டு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

39கிராமம் ஈயாக்காளி பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டுவந்த தும்பங்கேனி கிராமத்தை சேர்ந்த 58வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் ஈயாக்காளிகுளத்தினை அண்டிய பகுதியில் விவசாயிகள் பெருமளவில் நெற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.எனினும் அப்பகுதியில் தொடர்ச்சியாக யானையின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டுவந்துள்ளனர்.இந்த நிலையில் விவசாயிகள் தங்களின் விவசாயத்தின் பாதிப்பினை கருத்தில்கொண்டு தமது வயல் நிலங்களை சூழ மின்சார இணைப்பினை வழங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த வயல் பகுதிக்கு வந்த யானையினை அங்கு காவலில் இருந்து விவசாயி விரட்டியடித்துவிட்டு தமது காணிக்குள் செல்ல முற்பட்டபோது வயல்வேலியில் உள்ள கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கி விவசாயி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அங்குவந்த யானை வேலியை உடைத்துள்ள நிலையில் அந்தவேலியில் இருந்த மின்சார இணைப்பு வேலியின் ஏனைய வேலிக்கம்பியிலும்இணைந்திருந்தமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெல்லாவெளி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதேநேரம் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி சம்பவம் தொடர்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

நீண்டகாலமாக யானையினால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இப்பகுதி விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதன் மூலமே இவ்வாறான இழப்புகளை தடுக்கமுடியும் என போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.

தொடர்ச்சியாக இப்பகுதிகளில் யானையின் பிரச்சினைகள் இருந்துவரும் நிலையில் விவசாயிகள் தங்களது விவசாயத்தினை பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையேற்படுவதாகவும் அதன் காரணமாக இவ்வாறான துர்ப்பாக்கிய நிகழ்வுகளும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் உடனடியாக இப்பகுதி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலான யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.