வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்ட வேத்துச்சேனை கிராம மக்களுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்.

இதன்படி வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேத்துச்சேனை, பீலியாறு கிராம மக்களுக்கான போர்வைகளை இன்று (24.12.2019) வழங்கி வைத்தார்.

அவுஸ்ரெலியாவில் தொழில்புரியும் மண்டூரினைச் சேர்ந்த ம.செந்தூரனின் நிதி உதவியின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற மேற்படி உதவிகளை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் வி.பூபாலராஜா, வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, கிராம உத்தியோகத்தர் இன்சான், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கமலேஸ் மற்றும் மகளீர் அமைப்புகள் உட்பட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோருமட இணைந்து வழங்கி வைத்தனர்.

ஓவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தங்களின் போதும் வேத்துச்சேனை உட்பட அதனை அண்டிய கிராமங்களும் கடுமையான வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு வரும் பிரதேசமாகப் பதியப்பட்டு வருவதுடன், பலர் இடம்பெயர்ந்தும் வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வேத்துச்சேனை கிராமத்தில் 117 குடும்பங்களுக்கும், பீலியாறு கிராமத்தில் 8 குடும்பங்களுக்குமாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.