காத்தான்குடி நகர சபையின் கட்டண அறவீடு இன முரண்பாட்டை ஏற்படுத்தும் – சாணக்கியன்


காத்தான்குடி நகர சபையானது மட்டக்களப்பு மாநகர சபையில் உள்ள மஞ்சந்தொடுவாய் வட்டாரத்தில் பல கட்டணங்களை அறவிட்டு, சோலை வரி அறவீடு செய்கிறது. இது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும். மாநகர சபை உறுப்பினர்களுக்கு இதுபற்றி அறிவிக்காமல் காத்தான்குடி நகர சபை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. இது தடுக்கப்பட வேண்டிய செயற்பாடு என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உள்ளாட்சிமன்றங்கள் என்பவை வெறுமனே குப்பைகளைச் சேகரிப்பதற்கும் அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்கும் மட்டுமேயான நிறுவனங்கள் அல்ல. மாநகரசபைகள, நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் என்பவை சட்டமியற்றும் மற்றும் துணைச்சட்டங்களை உருவாக்கும் பொறுப்புகளைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்களாகும். இருப்பினும்,அவற்றின் அதிகாரங்களும் வருவாய் வழிகளும் போதியளவில் புதுப்பிக்கப்படவில்லை என்பதோடு,பல சபைகள் கடுமையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எத்தனை மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் இயங்கி வருகின்றன. அவை ஒவ்வொன்றையும் எந்தக் கட்சி அல்லது குழு நிர்வகிக்கிறது?சபைகள் தமது சொந்த வருவாயில் இருந்து செலுத்த வேண்டிய சம்பளங்களின் சதவீதம் எவ்வளவு ? 2029 ஆம் ஆண்டு வரை எத்தகைய அதிகரிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன, இது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியத்தின் நிபந்தனையா?

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மத்திய மற்றும் மாகாண அபிவிருத்தி ஒதுக்கீடுகளில் எவ்வளவு தொகையும் சதவீதமும் ஒவ்வொரு மாகாணத்திற்கும்,அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ளாட்சி மன்றத்திற்கும் சென்றடைந்தது? கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு சபைக்கும் வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் எவை ?

2025-2026 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒவ்வொரு சபையினாலும் மதிப்பிடப்பட்ட மற்றும் வசூலிக்கப்பட்ட வரிகள், வாடகைகள்,உரிமக் கட்டணங்கள், அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் மற்றும் தண்டப்பணங்கள் யாவை ? நிலுவையில் உள்ள சதவீதம் எவ்வளவு,மற்றும் பெருமளவில் நிலுவை வைத்துள்ள தவறுதல்தாரர்களுக்கு எதிராக அரசினால் வழங்கப்படும் சட்ட உதவி யாது? நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தண்டப்பண தொகை புதுப்பிக்கப்பட வேண்டும்.

மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் விதிக்கக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரிகள், உரிமக் கட்டணங்கள் ,அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்,வீதி வியாபார மற்றும் சந்தைக் கட்டணங்கள், தண்டப்பணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் யாவை,அவை கடைசியாக எப்போது திருத்தப்பட்டன? ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள அதிகபட்ச தண்டப்பணம் யாது, இத்தொகைகளை நவீனமயமாக்கவும் அவ்வப்போது புதுப்பிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் எவை?

நகரசபைகளாக அல்லது மாநகரசபைகளாக தரம் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள பகுதிகள் எவை, அவற்றின் தற்போதைய நிலை என்ன? மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களில் மேயர்கள்,தவிசாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை எது, இருவருமே சேர்க்கப்படுவார்களா? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சிமன்றங்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப தரமுயர்த்த வேண்டிய நிலையில் உள்ளதா, அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்றார்.