மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புற்றுநோயை கட்டுப்படுத்தலும் தடுத்தலும் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டமொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய்க்குரிய பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ருதேசன் ஏற்பாட்டிலும் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் மோகனகுமார் தலைமையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், சத்திரசிகிச்சை நிபுணர்கள், கதிர்வீச்சு நிபுணர்கள் உள்ளிட்ட பல சிறப்பு வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் புற்றுநோய் தடுப்பு சமூகம் , குடும்ப திட்டமிடல் சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், ஆரையம்பதி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மற்றும் பல தரப்பட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் டாக்டர் இக்பால் அவர்களினால் விசேட விளக்கமளிப்பு ஒன்று வழங்கப்பட்டது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் புற்றுநோய் வீதமானது நல்ல நிலையிலேயே (குறைந்த மட்டத்தில்) காணப்படுவதாக அவர் தரவுகளுடன் தெளிவுபடுத்தினார்.
எதிர்காலத்தில் புற்றுநோயை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை எவ்வாறு முறையான ஒழுங்கமைப்பில் முன்னெடுப்பது என்பது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான ‘மெமோகிராபி’ பிரிவின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இது மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் எனவும், மக்கள் இதனை பரிசோதனைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் மற்றும் 26 ஆரோக்கிய வாழ்வு நிலையங்கள் ஊடாக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகட்ட பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயற்பட முடிவெடுக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் பயனுள்ள முறையில் அமைந்த இந்த கூட்டத்தின் அடுத்த கட்ட மீளாய்வு கூட்டம் நான்கு மாதங்களில் நடைபெறும் இதன்போது டாக்டர் ருதேசன் தெரிவித்தார்.


.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)