மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்ட நிலங்களை மீளமைப்பதற்கும், மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களுக்குப் போதுமான மேய்ச்சல் நிலங்களை நிரந்தரமாக எல்லை நிர்ணயம் செய்து வர்த்தமானியில் அறிவிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்.மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் செயற்படுகிறார்கள். பாற்பண்ணையாளர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவான தீர்வினை உறுதியாக வழங்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த விவசாயம் மற்றும் கால்நடை, நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் உண்மையே, எதனையும் நிராகரிக்கவில்லை என்றார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மேலும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மயிலத்தமடு – மாதவனை பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் பல நூற்றாண்டுகளாக மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
போராட்டங்கள், வழக்குகள் மற்றும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிமொழிகளுக்கு மத்தியிலும், ஆக்கிரமிப்பு, பயிர்ச்செய்கை மற்றும் அழிப்புகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இதுபோன்ற செயற்பாடுகள் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளைப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களையும் பாதித்துள்ளன.
மயிலத்தமடு – மாதவனை, போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் உள்ள பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களின் உண்மை பரப்பளவு மற்றும் சட்டப்பூர்வ நிலை என்ன? மேய்ச்சலுக்காக எவ்வளவு நிலம் எஞ்சியுள்ளது மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, பயிரிடப்பட்டுள்ளது அல்லது பிற நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது?
மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு ஏன் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? இந்த தாமதத்திற்கு யார் பொறுப்பு, ஜனாதிபதியின் உத்தரவு எப்போது அமுல்படுத்தப்படும்? ஜனாதிபதியின் உத்தரவு ஏன் அமுல்படுத்தப்படவில்லை? ஜனாதிபதியின் அறிவிப்பையும் செயற்படுத்தாத நபர் யார்?
இந்த மேய்ச்சல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கோ அல்லது ஆக்கிரமிப்பதற்கோ அனுமதி அளித்தது யார்? தற்போது நிலத்தை வைத்துள்ளவர்களின் பெயர்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பரப்பளவு மற்றும் அதற்கு ஆதாரமாகக் கூறப்படும் உரிமங்கள் அல்லது பிற சட்டப்பூர்வ அனுமதிகள் குறித்த விபரங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமா?
விவசாயக் குழு அல்லது பிற அதிகாரப்பூர்வ அரசாங்கக் கூட்டம், கால்நடைகளை திவுலான பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு கொண்டுசெல்லுமாறு பண்ணையாளர்களுக்கு வழிகாட்டும்போது, வனவளத் திணைக்களம் அதற்கு அனுமதி மறுத்தால், பண்ணையாளர்கள் என்ன செய்வார்கள்? இதில் எந்த அதிகாரசபைக்கு இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது? மேலும் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பிக்குமா?
கிரான், செங்கலடி, போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் எவ்வளவு மேய்ச்சல் நிலங்கள் மகாவலி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் அல்லது பிற அரச நிறுவனங்களால் உரிமை கோரப்பட்டுள்ளன அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அதற்கான சட்டப்பூர்வ அடிப்படை என்ன?
மேய்ச்சல் நிலங்களில் பயிரிடும் வெளியாட்களுக்கு அரசியல் அல்லது நிதி ஆதரவு கிடைப்பதாக பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி வழங்குபவர்கள்இ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் அல்லது பாதுகாப்பளிப்பவர்கள் யார் என்பது குறித்தும், அதில் அரசியல்வாதிகள், பௌத்த துறவிகள் அல்லது அரச அதிகாரிகளின் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?
சட்டவிரோத ஆக்கிரமிப்பு, தீவைப்பு, பயிர்ச்செய்கை மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல் அல்லது காயப்படுத்தப்படுதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதுவரை எத்தனை கைதுகள், வழக்குத் தொடரல்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றல்கள் இடம்பெற்றுள்ளன?
சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்ட நிலங்களை மீளமைப்பதற்கும், மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களுக்குப் போதுமான மேய்ச்சல் நிலங்களை நிரந்தரமாக எல்லை நிர்ணயம் செய்து வர்த்தமானியில் அறிவிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அரசாங்கம் எப்போது வழங்கும்?
மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்தை கொண்டு தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு குழு செயற்படுகிறது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் உட்பட ஒருசில பிக்குகள் இதன் பின்னணியில் உள்ளார்கள். அந்த பகுதியில் இன முரண்பாடுகள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. பண்ணையாளர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த விவசாயத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிடும் விடயங்கள் அனைத்தும் உண்மையே, எதனையும் நிராகரிக்கவில்லை. கிவுல் ஓயா திட்டத்தை இந்த ஆண்டு செயற்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சினைகள் குறித்து நாளை பாராளுமன்ற குழு அறையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இங்கு இது தொடர்பில் கலந்துரையாடலாம் என்றார்.
