வங்காள விரிகுடாவில் தீவிர தாழ் அமுக்கம் : கடும் காற்று, கொந்தளிப்பான கடல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!


இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் வடமேற்குத் திசையில் நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கமானது சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக வலுவடைந்துள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று (23) புதன்கிழமை காலை 05:30 மணி நிலவரப்படி, தாழ் அமுக்கம் வட அட்சரேகை 18.0°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 84.7° E இல் நிலைகொண்டுள்ளது.

இத்திசையமைப்பானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு இந்தியாவின் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும். பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன் கடல் மிகக் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காற்றின் வேகம் மணிக்கு 55–60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்பதால் கடல் அவ்வப்போது சீற்றமாகக் காணப்படும்.

குறிப்பிட்ட இந்தப் பகுதியில் உள்ள கடற்பரப்பிற்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் எனக் கடுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இருக்கும் படகுகள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இமைப்பகுதியின் நேரிடைக் கரைகடப்பு இந்தியாவில் நிகழ்ந்தபோதிலும், தென்மேற்குப் பருவக்காற்று வலுவடைவதால் இலங்கையின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காங்கேசந்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி வழியே அம்பாந்தோட்டை வரையிலான கரையோரக் கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் கடலோர மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.