திருகோணமலை மான் பூங்காவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்


திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்து, அங்குள்ள மான்களுடன் பொழுதுகளைக் கழிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக  மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.

அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்காவும் சான்று பகிர்கின்றன. இதனால் மான் இனங்களை பாதுகாக்கவேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும்.

இந்த மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.

மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன், திருகோணமலையில் உள்ள மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார் நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இதுபோன்ற விடயங்களை மக்கள் மத்தியில் விழிப்பூட்ட வேண்டும். இதன் மூலம் மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.