மட்டக்களப்பில் நாளை முதல் தினமும் 4 மணிநேரம் நீர்வெட்டு


எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை 22ஆம் திகதி முதல் நாள்தோறும் 4 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்கின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக நீர் வழங்கலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

அதன்படி, நாளை சனிக்கிழமை (22) முதல் காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை நாளாந்தம் நீர் விநியோகம் தடைப்படும் என  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலை வழமைக்கு திரும்பும் வரை  நீர் பாவனையாளர்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதோடு அதனால் ஏற்படும் அசௌகரியங்களை  தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10 அடியாக குறைந்துள்ளதுடன், தற்போது மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வானிலை அவதானிப்பு நிலையத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.