மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு நிலையத்தின் ஓராண்டு நிறைவு விழா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று (17) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.
ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் கடந்த ஒரு வருடமாக இலவச புனர்வாழ்வு சேவைகளை வழங்கி வரும் நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இதன்போது பாராட்டப்பட்டு, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பக்கவாத நோயாளிகளுக்கு உடற்திறன் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்நிலையத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இந்நிலையம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தன்னம்பிக்கையுடனும் சுயாதீனமாகவும் வாழ்வதற்கு முக்கிய பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மட்டுமன்றி, அவர்களின் குடும்பத்தினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், நோயாளிகள் கண்ணியமானதும் சுயாதீனமானதுமான வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்நிலையம் வழிவகுத்து வருகின்றது.
இந்நிலையத்தில் உடற்திறன் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை, உளவியல் ஆதரவு, குடும்ப வழிகாட்டல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், ஆயுர்வேத வைத்திய சேவைகள் மற்றும் தேவைக்கேற்ப விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் ஒருங்கிணைந்து இலங்கையில் முன்மாதிரியாக இயங்கி வரும் நிலையமாக இது திகழ்கின்றது எனச் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி கருத்துத் தெரிவிக்கையில் இந்நிலையத்தை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வழங்குவதுடன் நோயாளிகளின் போக்குவரத்திற்காக சிறிய வீதியொன்றை அமைத்துத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமாயின் நோயாளிகளுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
























