நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
திராய்மடு பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த.மணிமாறன் தலைமையிலான குழுவினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் திராய்மடு பகுதியில் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருந்த வீடுகளும், டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்ட இடங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவ்வாறான இடங்களைப் பராமரித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், டெங்கு பரவலுக்கு வழிவகுக்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் தேங்கி நின்ற நீர் அகற்றப்பட்டதுடன் பொதுமக்களுக்கு டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதுடன் வாரந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.







