மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு


கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் கனிஷ்டப் பிரிவு மாணவர்களுக்கான புதிய கற்பித்தல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (14) காலை நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, விசேட இறைவழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமாதவானந்தர் மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். ரவி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் எம். துதிஷ்கரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித் திணைக்களப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த புதிய கட்டிடம், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.