ஆண்டின் இறுதியில் மிகவும் சக்திவாய்ந்த 'எல்-நினோ' தாக்கம்: நீர் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்துமாறு திணைக்களங்கள் அவசர வேண்டுகோள்!


நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதியாகும் போது மிகவும் சக்திவாய்ந்த 'எல்-நினோ'  காலநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் தீவிரமான எல்-நினோ காலநிலை மாற்றம் இவ்வாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன,

எல்-நினோ காலநிலை படிப்படியாக தீவிரமடைந்து வருகின்றது. சர்வதேச முன்னறிவிப்புகளின்படி, ஆண்டின் இறுதியில் இது அதிதீவிர எல்-நினோவாக மாறுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

1950 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல்-நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில், இது அனைத்தையும் விட மிகவும் பிரபல்யமான மற்றும் பலத்த எல்-நினோவாக உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறு தற்போது 70 சதவீதத்தை நெருங்கியுள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 37 சதவீதம் வரை குறைந்துள்ளதால், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமானது என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு தற்போது சராசரியாக 37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தற்போதைய நீரிருப்பு யால சிறுபோகச் செய்கைக்கும், வரவிருக்கும் நவம்பர் - டிசம்பர் மழைவீழ்ச்சி கிடைக்கும் வரையிலான தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீத முழுத் திறனுடன் இயங்கி வருவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் எமது அதிகபட்ச கொள்ளளவில் விநியோகம் சீராக நடைபெற்று வருகின்றது.சில மாவட்டங்களில் வறட்சியான வானிலை நிலவியபோதிலும் நீர் விநியோகம் குறைக்கப்படவில்லை. விநியோகத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. எனினும், நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 56 சதவீதத்திற்கும் குறைவாக நீரிருப்புச் சரிந்துள்ள நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.