திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உயிரிழந்த உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பிரதான வீதியில், படுகொலை இடம்பெற்ற வீடுகளுக்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
17.08.1985 அன்று படுகொலை செய்யப்பட்ட 11 பேர் உள்ளிட்ட அதனை அண்மித்த காலங்களில் குறித்த பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மலர் தூவிஇ விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இப்படுகொலைச் சம்பவத்தில் குணராசா வசிகலா, குணராசா சங்கர்,குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதுடன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய எட்டு வயது மகள் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயிருந்தார். இதுவரை அவர் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் படுகொலை இடம்பெற்று 41 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித நீதியோ நிவாரணங்களோ கிடைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.










