இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 81,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்தார்.
எல் நினோ காலநிலை நிலைமையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வறட்சியின் தாக்கம் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஏழு மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 25,563 குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தேவையான வழிகாட்டுதல்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக ஒருவருக்கு நாளாந்தம் வழங்கப்படும் நீரின் அளவு 6 லீற்றரில் இருந்து 15 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தற்போது 324 நீர் பவுசர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேவையேற்பட்டால் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான மேலதிக நீர் பவுசர்களும் பயன்படுத்தப்படும்.
அத்தோடு ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான நீர் விநியோகத்தை தீர்மானிக்க பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய வறட்சியினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய கடும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக தேசிய வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்கள் உடனடியாக தமது கிராம சேவகருக்கு அறிவித்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
