கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம் பெண் ஊழியர்களையும் மீண்டும் அவர்கள் இருந்த இடத்திலேயே நியமிக்க வேண்டும் - சஜித் பிரேமதாச


கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களை சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் 9 முஸ்லிம் பெண் ஊழியர்களையும் உடனடியாக அவர்கள் இருந்த இடத்திலேயே அமர்த்தி அவர்களுக்கு அவர்களின் கலாசாரத்திற்கமைய சீருடையை வழங்கி நியமனம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம் பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தை கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது.முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடை தொடர்பான பிரச்சினையால் அவர்களை கல்முனை வடக்கு வைத்தியசாலையில் இருந்து வேறு வைத்தியசாலைக்கு இட மாற்றியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

எமது நாட்டில் அந்தந்த மதங்களுக்கு, அந்தந்த மக்கள் பிரிவினருக்கு மற்றும் அந்தந்த கலாசாரங்களை கொண்டவர்களுக்கு தமது மதங்கள் மற்றும் கலாசாரத்தை பின்பற்றும் உரிமை உள்ளது. இதனால் கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோருகின்றோம்.

புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களை சீருடை தொடர்பான விடயத்தால் இடமாற்றியுள்ளனர். இனம், மதம், குலம், வகுப்பு ரீதியான எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் செயற்படுவதாக கூறியே ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் புதிதாக நியமனம் பெற்று வந்த முஸ்லிம் தாதியர்கள் 9 பேரை அவர்களின் சீருடை தொடர்பான விடயத்தை பயன்படுத்தி இடமாற்றம் செய்திருப்பது, நீங்கள் தேர்தல் மேடைகளில் முன்வைத்த கொள்கை பிரகடனத்துக்கு முற்றிலும் முரணாகும்

எனவே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து, இடமாற்றம் செய்யப்பட்ட 9 முஸ்லிம் பெண் ஊழியர்களையும் உடனடியாக அவர்கள் இருந்த இடத்திலேயே அமர்த்தி அவர்களுக்கு தமது கலாசாரத்திற்கமைய சீருடையை வழங்க வேண்டும்.. இதில் என்ன பிரச்சினை உள்ளது? என கேட்கிறேன் என்றார்.