மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் உள்ள நெல் களஞ்சியசாலையில் விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு இன்று பிற்பகல் மீண்டும் நெல் கொள்வனவு விவசாயம் காணி நீர்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பு செயலாளர் கே.திலகநாதனின் முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக இம்முறை 25இலட்சம் கிலோ நெல் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நெல் களஞ்சியசாலைக்கு முன்பாக நேற்று தொடக்கம் நெல்லை விற்பனைசெய்வதற்காக வந்த விவசாயிகளின் நெல்லை கொள்வனவுசெய்யாமல் இன்று அதிகாரிகள் நிலையத்தினை பூட்டிச்சென்ற நிலையில் விவசாயிகள் நிர்க்கதியான நிலையில் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
18ஆம் திகதியும் 19ஆம் திகதியும் நெல் களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவுசெய்யப்படும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளா பிரிவுக்குட்பட்ட திக்கோடை நெல் களஞ்சியசாலைக்கு விவசாயிகள் நேற்று நெல்லை விற்பனை செய்வதற்கு கொண்டுசென்றுள்ளனர்.
இதன்போது அங்கு அதனை கொண்டுசெல்வதற்கான வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கு நெல் சோதனை செய்யப்பட்டு மட்டக்களப்பு நெல் களஞ்சிய சாலைக்கு கொண்டுசெல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் உள்ள கள்ளியங்காடு நெல் சந்தைப்படுத்தும் நிலையத்திற்கு விவசாயிகள் நெல்லை கொண்டுவந்து காத்திருந்துள்ளனர்.நேற்று காலை வந்தவர்கள் நேற்று மாலை வரையில் நெல்லை பெற்றுக்கொள்ளாத நிலையில் காத்திருந்த நிலையில் நேற்று மாலை ஆறுமணியளவில் நெல் சந்தைப்படுத்தும் அதிகாரிகள் நாளை காலை 8.00மணியளவில் நெல்லைக்கொள்வனவு செய்வதாக கூறிவிட்டு களஞ்சியசாலையினை பூட்டிவிட்டுச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நெல்லைக்கொண்டுவந்த 16க்கும் அதிகமான டரக்டர்களும் டிப்பர்களும் களஞ்சியசாலைக்கு முன்பாகவே தரித்து நின்ற நிலையில் இன்றைய தினம் காலை வந்த அதிகாரிகள் தங்களிடம் காசு இல்லை நெல்லைக்கொண்டுசெல்லுமாறு கூறிய நிலையில் நெல் களஞ்சியசாலையில் முன்பாக விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியிலும் அதிகளவான பணத்தினை செலவளித்த நிலையிலும் நெல்லைக்கொண்டுவந்த பின்னர் அவற்றினை வாங்குவதற்கு பணம் இல்லை கூறமுடியாது எனவும் நாளை நெல்லைக்கொள்வனவுசெய்வதாக கூறிவிட்டு இன்று இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என விவசாயிகள் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருமளவான பணத்தினை செலவளித்து இந்த நெல்லைக்கொண்டுவந்ததாகவும் நெல்சந்தைப்படுத்தும் அதிகாரிகள் கூறியதன் பின்னரே இதனைக்கொண்டுவந்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.தமது நெல்லை கொள்வனவுசெய்யும் வரையில் அப்பகுதியிலிருந்து தமது வாகனங்களை கொண்டுசெல்வதில்லையெனவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் விவசாயம் காணி நீர்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பு செயலாளர் கே.திலகநாதனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து நிர்வாக ரீதியாக இருந்த காசு வழங்கல் தொடர்பான சிக்கல்நிலை நிவர்த்திசெய்யப்பட்டு மீண்டும் நெல் கொள்வனவு முன்னெடுக்கப்பட்டது.