மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய மினிசூறாவளி - 47 வீடுகள் சேதம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 47வீடுகள் சேதமடைந்துள்ளதான அறிக்கைகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்துவீழ்ந்ததன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று,மண்முனைப்பற்று,ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு,காத்தான்குடி அடங்களாக பல இடங்களில் மினிசூறாவளியின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுவரையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 21வீடுகளும்,மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 17வீடுகளும்,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 09வீடுகளும் சேதமடைந்தது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் பல்வேறு பகுதிகளிலும் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மரங்கள் முறிந்துவிழுந்ததனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலும் பிரதேச செயலக ரீதியான தகவல்கள் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக ரீதியாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் வீதிகளில் முறிந்துவீழ்ந்த மரங்களை அகற்றும் பணிகளை பிரதேச சபைகள் முன்னெடுத்துவருவதுடன் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையினை சீர்படுத்தும் நடவடிக்கைகளை மின்சாரசபை விரைவாக முன்னெடுத்துள்ளது.