சர்வதேச போலியோ ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (25)மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.2014ஆம் ஆண்டு இலங்கை போலியோ அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டபோதிலும் சுகாதார அமைச்சும் அதன் பங்காளி அமைப்புகளும் தொடர்ந்தும் இது தொடர்பில் அவதானிப்பினை செலுத்திவருகின்றது.
அந்த வகையில் சுகாதார அமைச்சுடன் போலியோ ஒழிப்பு செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் ரொட்டறிக்கழகம் தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் பல்வேறு சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள ரொட்டறிக்கழகத்தில் இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் தலைவர் பொறியியலாளர் மு.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம்,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ரொட்டறிக்கழகத்திற்கு முன்பாக வாகனங்களிலும் துவிச்சக்கர வண்களிலும் மோட்டார் சைக்களிலும் விழிப்புணர்வு பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு –கல்முனை வீதியில் ஆரையம்பதி வரையில் சென்று அங்கிருந்து மீண்டும் ரொட்டறிக்கழகம் வரையில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியின்போது போலியோ நோயின் தாக்கம் தொடர்பில் விழிப்பூட்டும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.