வறுமையான நிலையிலும் நீண்டதூரம் நடந்துசென்று கல்வியில் சாதனை படைத்த மாணவிக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான்,பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவி ஒருவருக்கு கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டுசெல்ல துவிச்சக்கரவண்டியொன்று வழங்கிவைக்கப்பட்டது.இன்றைய தினம் அக்னிச் சிறகுகள் பேரவையிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பாலர்சேனை கிராமத்தில் 5 பெண் பிள்ளைகளை கொண்ட மிகவும் வறுமையான  குடும்பத்தில் பல தூரம் நடந்து சென்று இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி கற்று தரம் 5 புலமை பரீட்சையில் 152 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவிக்கு நாவற்காடு- அக்னிச் சிறகுகள் பேரவையால் இந்த துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

இதனை அக்னிச் சிறகுகள் பேரவை தாயக பொறுப்பாளர், செயற்பாட்டாளர் சோ.சிவா, சமுக செயற்பாட்டாளர் ஆதன் குணா மற்றும்இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் ஆசிரியர் விஸ்வநாதன் ரஜீவன் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது.

பிள்ளையின் தாய்க்கு 6 பெண் பிள்ளைகளில் ஒரு பிள்ளை இறந்துவிட்டது. தற்போது 5 பெண் பிள்ளைகளோடு மிகவும் வறுமை நிலையில் வாழ்கிறார். இருந்தும் வறுமையின் பிடியோடு பிள்ளைகளை படிப்பித்து வருகிறார். கணவனும் கால் வாதத்தோடு கூலி வேலை செய்துதான் இவர்களின் காலம் போகிறது. ஒரு மகள் உயர்தரம் கற்கிறார், இவர்களின் நிலை பாரதூரமான வேதனையான விடயம்.  இவர்களுக்கு பல தேவைகள் இருக்கிறது  இவர்களுக்கு  உதவிகளை வழங்குமாறு அக்கினிச் சிறகுகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.