தாய்க்கு தாயான தலைமகன் டாக்டர் தங்கவடிவேல் ஐயாவுக்கு பெரியகல்லாறு வைத்தியசாலையில் சிலை திறந்துவைப்பு


வைத்தியர்களை தெய்வங்களாக மதிக்கும் கலாசாரம் அனைத்து மக்கள் மத்தியில் இருந்துவரும் நிலையில் ஒரு வைத்தியரை தெய்வமாக பார்க்கும் வகையில் மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரின் சிலை திறக்கப்பட்டுள்ளது.மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தாரக மந்திரத்தினை தனது வாழ்நாளில் முழுவதையும் வைத்தியசேவையில் அர்ப்பணித்த மகப்பேற்று வைத்திய நிபுணர் அமரர் தங்கவடிவேல் அவர்களின் உருவச்சிலை இன்று பெரியகல்லாறு வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டது.
முட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது வாழ்நாள் முழுவதையும் வைத்தியசாலையில் கழித்து ஓய்வுபெற்று இயற்கை எய்திய மகப்பேற்று வைத்திய நிபுணர் தங்கவடிவேல் அவர்கள் மட்டக்களப்பு மக்களின் நீங்காத இடம்கொண்டவராக இருந்துவருகின்றார்.
இதன்கீழ் அவரின் சேவையினை கௌரவப்படுத்தும் வகையில் அவர் பிறந்த ஊரான பெரியகல்லாறில் உள்ள வைத்தியசாலையில் அவரது திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் மகப்பேற்று பிரிவும் திறந்துவைக்கப்பட்டது.
பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஐய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் கே.வசந்தராஜா, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கே.புவனேந்திரநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தின் தாய்சேய் நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் N.கிரிசுதன்,களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.உதயசூரியா,டாக்டர்கள்,ஆலய வண்ணக்கர்கள், மதகுருமார்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவு வைத்திய விடுதிக்கான புனரமைப்புக்கான உதவிகளை அமரர் சந்திரசேகரம்,மனோன்மணி ஞாபகார்த்தமாக குடும்பங்களினால் உதவியதுடன் அமரர் மகப்பேற்று வைத்திய நிபுணர் தங்கவடிவேல் அவர்களின் சிலையினை அமைப்பதற்கான உதவிகளை ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி கமலேஸ்வரி முருகையா அவர்கள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.