இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றது. இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை இன்றும் (20.02.2026)நாளையும் (21.02.2026) நாளை மறுநாளும்( 22.02.2026) பரவலாக கன மழை முதல் மிகக் கனமழையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் அவ்வப்போது கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
****** ஆகவே அன்புக்குரிய கிழக்கு மாகாணங்களின் உறவுகள் குறிப்பாக ஆற்றங்கரையோரங்கள், குளங்களின் வான் பாயும் பகுதிகள், தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பாக இந்த மூன்று நாட்களிலும் மிக அவதானமாக இருப்பது மிக அவசியம்.**************
வடக்கு மாகாணத்திலும் இன்று முதல் (20.02.2026) மழை பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக பெருநிலப்பரப்பில் சில இடங்களில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு( 20.02.2026 -- 22.02.2026) மத்திய, ஊவா, தென், சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
******* ஆகவே ஊவா, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களின் உறவுகள் கனமழையோடு கூடிய நிலச்சரிவு அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்பாக இருப்பது சிறந்தது.****************
அதேவேளை முன்னர் கூறியவாறு இன்று முதல் (20.02.2026) எதிர்வரும் 22.02.2026 வரை நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று முதல் இலங்கையின் கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
பொதுவாக வடகீழ்ப் பருவ கால வானிலைத் தோற்றப்பாடுகள், ஜனவரி மாதத்தின் இறுதிபபகுதியில் இருந்தே பின்வாங்க தொடங்கி பெப்ரவரி முற்பகுதியில் முழுவதுமாக விலகுவதே வழமை. ஆனால் இம்முறை மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது ( ஒரு சில நாட்கள் முந்தலாம்).
இதுவே காலநிலை மாற்றத்தின் பாதிப்பு.
கடந்த சில ஆண்டுகளாக எங்கள் காலநிலைப் பருவத்திற்கும், நெற்செய்கைப் பருவத்திற்குமிடையில் எந்தவிதமான ஒத்திசைவும் காணப்படவில்லை. இம்முறை அந்த நிலைமை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நெற்செய்கையில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.
இலங்கையின் நெற்செய்கையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மாகாணங்களின் (அம்பாறை, மட்டக்களப்பு) நெல் அறுவடை கடந்த சில நாட்களாக கிடைத்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இதற்கு லா நினோ மற்றும் நடுத்தர நிலைமைகள் பிரதான காரணம்.
ஆனால் இவ்வாண்டின் நடுப்பகுதியில் இருந்து எல் நினோ நிலைமை உருவாகுகின்றது. இது லாநினோவிற்கு நேரெதிரான பாதிப்புக்களை தரவல்லது( வரட்சி, அதிக வெப்பம். அதிக ஆவியாக்கம்,மழை கிடைத்தாலும் பெரு வெள்ள உருவாக்கம்).
ஆகவே துறை சார்ந்த விற்பன்னர்கள் இது தொடர்பாக அவதானம் செலுத்தி மாற்று வழிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.



