குருநாகல் மாவட்டத்தின் கணேவத்தை பகுதியில் நேற்று பெண் ஒருவர் படுகொலை செய்து, ஆண் ஒருவரும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி காலை 49 வயதான சோமலதா என்ற 2 பிள்ளைகளின் தாய் மற்றும் 40 வயதான பெரும்படகே ஜயதிஸ்ஸ என்ற ஆணும் உயிரிழந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சட்டபூர்வமான கணவர் சில வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான ஆணுடன் சுமார் பத்து வருடங்களாக தொடர்பைப் பேணி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அண்மைய காலத்தில் அந்தப் பெண் அவரை விடுத்து வேறொரு நபருடன் புதிய தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுவே இந்த கொலைக்கு பிரதான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரினதும் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகில் அமைந்திருந்ததன் காரணமாக, இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி காலை பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அந்த ஆண், அவர் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
பெண்ணைக் கொலை செய்த சில நிமிடங்களில் தனது வீட்டிற்கு வந்த அந்த ஆண், வீட்டின் முன்னாலேயே உயிரை மாய்த்துள்ளார்.
உயிரை மாய்ப்பதற்கு முன்னர் அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
