மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் மேற்கொள்ளும் பணி பகிஸ்கரிப்பு –முடங்கிய பஸ்கள்


மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு பேரூந்துச்சாலையிலிருந்து சேவையிலிடும் எந்த பஸ்களும் இன்று காலை முதல் சேவையலீடுபடவில்லை.

மட்டக்களப்பு பேரூந்துச்சாலையின் பிரதி பொது முகாமையாளரை இடமாற்றம் செய்யவலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த பிரதி பொது முகாமையாளர் ஊழியர்களுடன் தொடர்ச்சியான முரண்பாடுகளை கொண்டுள்ளதுடன் ஊழல்களிலும் ஈடுபட்டுவருவதாகவும் அவரை இடமாற்றம் செய்யுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றபோதிலும் எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட தூரமிருந்துவரும் ஊழியர்களை பழிவாங்குவதாகவும் ஐந்து நிமிடங்கள் பிந்திவந்தாலும் கடமைக்கு சமூகமளிக்கவிடாமல் தடுப்பதாகவும் தமக்கு சாதகமாக செயற்படுவோருக்கு சகல சலுகைகளும் வழங்குவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இன்றைய தினம் மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு பேரூந்துசாலையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவந்த சுமார் 45க்கும் மேற்பட்ட குறுகிய நீண்டதூர போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதன் காரணமாக பிரயாணிகள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.

குறித்த பிரதி பொது முகாமையாளரை இடமாற்றம் செய்யும் வரையில் தாங்கள் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.இதன்போது கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்ததுடன் பிரதி முகாமையாளருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினார்கள்.