இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினர் உணரும் விதமாகவும், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இலங்கையில் வருடந்தோறும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி ஆசிரியர்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக ஆசிரியர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும், இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே.
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்களைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல ஏனெனில் இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை மறைக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு.
ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்தவர் ஆசிரியர்.
ஒரு குழந்தையை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை. மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர்.
'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்'என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஒளவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.
மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.
அதேபோல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.
அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பைத் தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும்.
தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தமது மகத்தான ஆசிரியப் பணியை ஆர்வத்துடன் மேற்கொண்டுவரும் அனைத்து ஆசான்களுக்கும் ஆசிரியர் தினமான இன்று Maddu News இணையத்தளம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.