பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு 2 கோடியே 20 இலட்சம் ஒதுக்கீடு-இனமத பேதங்களை கடந்து தேவை எங்குள்ளதோ அங்கு எனது சேவை தொடரும் RDHS ஜ.எல்.எம்.றிபாஸ்


வி.சுகிர்தகுமார்

கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் பாவனை செய்ய முடியாது தேங்கி கிடந்த 200 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை இனங்கண்டு அவற்றை திருத்தம் செய்து மீள்பாவனைக்காக கையளித்துள்ளோம் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட சுகாதார வலுவூட்டல் திட்டத்தின் கீழான வேலைத்திட்டத்திற்கமைவாக அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் 2 கோடியே 20 இலட்சம் ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாம் தள கட்டட வேலைகளின் அடிக்கல்நடுகை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நாம் எப்போதும் அரசியல்வாதிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் குறை சொல்லாமல் அரச அதிகாரிகளாகிய நாம் சரியாக செயற்படுகின்றோமா எனவும் பார்க்க வேண்டும். அதுபோல் பொதுமக்களின் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். அவ்வாறு செயற்படும்போது மாத்திரமே நமது நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார். மாற்றம் நம்மில் இருந்தே ஆரம்பமாகவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம் நான் பொறுப்பேற்றதன் பிற்பாடு எனது குழுவுடன் இணைந்து வைத்தியாசாலைகளின் பாவனையற்று தேங்கிகிடந்த பொருட்களை இனங்கண்டு அவற்றை திருத்தி இன்று மீள்பாவனைக்காக கையளித்துள்ளோம். இதன் பயனாக வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை இன்று வழங்கவும் முடிந்தது.

 சில வைத்தியசாலைகளில் குறைபாடுகளும் தேவைப்பாடுகளும் உள்ளதாகவே எப்போதும் தெரிவிக்கப்படும். ஆனாலும் அந்த நிலை பனங்காடு வைத்தியசாலையை பொறுத்தவரை இல்லை எனவும் இதற்கு காரணமாக வைத்தியசாலை நிருவாகம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயற்பாடு சமூக அமைப்புக்களின் உதவிகள் என பலரது ஒத்துழைப்பு கிடைத்துள்ளமையே என்றார்.

 ஆயினும் கிடைக்கப்பெற்ற உலக வங்கியின் நிதியில் முதலாவது ஒதுக்கீடு பனங்காடு வைத்தியசாலைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இனமத பேதங்களை கடந்து தேவை எங்குள்ளதோ அங்கு எனது சேவை தொடரும் எனவும் கூறினார்.

நாட்டில் உள்ள இக்கட்டான இச்சூழலில் இவ்வாறான ஒரு அபிவிருத்தி தேவைதானா என சிலர் விமர்சனங்களை வைக்கக்கூடும். ஆனாலும் கிடைக்கப்பெற்ற நிதியை உரிய வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தாது போனால் குறித்த நிதி திரும்பி சென்றுவிடும். ஆகவேதான் விமர்சனங்களையும் தாண்டி இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனை தொடர்ந்து அன்னமலை மற்றும் தீகவாபி வைத்தியசாலைகளும் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.

பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.ஷகீல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.ஜி.அப்துல் வாஜிட் மற்றும் பிராந்தியத்தின் திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் எம்.சி.எம்.மாஹிர் ஆயுள்வேத வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஏ. நபீல் மலேரியா தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.எம்.நௌசாட் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு பிரதி செயலாளருமான வி.பபாகரன் செயலாளர் வைத்தியர் சித்திரா தேவராஜன் பிராந்தியத்தின் கட்டட பொறியியலாளர் ஆர். அச்சுதன் உயிரியல் விஞ்ஞான பொறியியலாளர் ஆர். ரவிச்சந்திரன் வைத்தியசாலையின் வைத்தியர்களான குணாளினி மற்றும் நௌசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு சமய வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வைத்தியசாலை கட்டடத்தின் இரண்டாம் தளத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. இதில் அனைத்து அதிதிகளும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

இதன்போது உரையாற்றிய வைத்தியசாலை அபிவிருத்தி குழு  செயலாளர் வைத்தியர் சித்திரா தேவராஜன் வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.