பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமன மறுப்பு -மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்


பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகயே இருந்து ஆசிரியராக பணிபுரிகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமன மறுப்பு அவர்களை பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு  திணைக்களங்களுக்கு மாற்றும் கல்வி அமைச்சின் செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் என்று தெரிவித்து மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் இன்று பதிவுசெய்யப்பட்டன.

அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் க.அனிரன் தலைமையில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஒன்றுகூடினார்கள்.

இதன்போது ஆசிரியர்களாக கடமையாற்றும் தம்மை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இது தமது அடிப்படை உரிமை மீறும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்து ஒவ்வொருவரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் கடிதங்களை வழங்கினார்கள்.

ஆறு வருடமாக கல்வி திணைக்களத்திற்குள் அபிவிருத்தி உத்தியோகத்தராக உள்வாங்கப்பட்டு ஆசிரியர்களாக கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றோம்.பாடசாலைகளில் பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களாக ஒருவருடம் பணியாற்றிய பின்னரே அப்பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றிலும் வழங்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் அப்பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளவர்கள் மீது இருந்த வழக்குகள் முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.வழக்கு நிலுவையில் உள்ளபோது எந்த வழக்கும் இல்லையென பிரதமர் தெரிவித்திருப்பதானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நாங்க்ள பாடசாலைகளில் ஆறுவருடங்கள் ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ள நிலையில் எங்களை கல்வி அமைச்சானது ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்காது ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு முன்னெடுக்கும் முயற்சியானது எமது அடிப்படை உரிமையினை மீறுகின்ற செயற்பாடாகவே கருதுகின்றோம்.இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுத்து எங்களுக்கு தீர்வினைப்பெற்றுத்தரவேண்டும்.

இந்த அரசாங்கம் நல்லது செய்கின்றது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றபோதிலும் எங்கள் விடயத்தில் மிக மோசமாக நடந்துகொள்வதாகவே நாங்கள் உணரமுடிகின்றது எனவும் இதன்போது கலந்துகொண்ட அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆறு வருடங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக கடந்த ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை தொடர்ந்து சட்டரீதியான நகர்வுகளை கடந்த ஆண்டு முதல் நாங்கள் முன்னெடுத்துவந்தோம்.அதனடிப்படையில் கடந்த அரசாங்கம் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு ஆசிரியர்களாக கடமையாற்றும் இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வினை வழங்குவதற்கு எத்தனித்தபோதிலும் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் தற்போதைய அரசாங்கம் ஆறுவருடமாக ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்குவதற்கு பல விடயங்களை இந்த அரசாங்கம் கூறிவருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.