பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்(VIDEO)

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து கொடியேற்ற கிரியைகள் நடைபெற்றன.கும்பபூஜை,மூலமூர்த்திக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் விசேடபூஜைகள் நடைபெற்றன.

இதன்போது கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலை கொடித்தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து வேத,நாத,மேள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் மஹோற்சவத்தில் தினமும் தம்பபூஜை,வசந்த மண்டப பூஜை,சுவாமி உள்வீதி,வெளிவீதியுலான என்பன நடைபெறவுள்ளது.

மஹோற்சவத்தில் 03ஆம் திகதி வேலத்திருவிழாவும் 04ஆம் திகதி கற்பூரச்சட்டி திருவிழாவும் 05ஆம் திகதி காவடி திருவிழாவும் 06ஆம் திகதி மாம்பழத்திருவிழாவும் 07ஆம் திகதி ஆண்டித்திருவிழாவும் 08ஆம் திகதி திருவேட்டை திருவிழாவும் 09ஆம் திகதி சப்புறத்திருவிழாவும் 10ஆம் தேர்த்திருவிழாவும் அன்று மாலை திருவிளக்கு திருவிழாவும் நடைபெற்று மறு நாள் 11ஆம் திகதி காலை நடைபெறும் தீர்த்த திருவிழாவுடன் உற்சவம் நிறைவுபெறும்.