மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 1000பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இன்று இந்த கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இன்றைய தினம் பிரதேச செயலக,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள்,உள்ளுராட்சிமன்ற ஊழியாகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகள் மக்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.