மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதனால் மக்களை தமது சுற்றுச்சூழல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலான பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாவிக்கரை பூங்கா தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலம் வரையிலான மூன்று கிலோமீற்றர் வடிகான்களையும் வீதியின் மருங்குகளையும் தூய்மைப்படுத்தும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மட்டக்களப்பு மாநகரசபை,மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இணைந்த இந்த சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
இதன் ஆரம்ப நிகழ்வானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,பிரதி ஆணையாளர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் லிங்கேஸ்வரன்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது வடிகான்கள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் வடிகான்களுக்குள் தமது கழிவு நீரைவெளியேற்றுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வீதிகளின் அருகில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.இந்த சிரமதான பணியின்போது வீதிகளில் காணப்பட்ட பெருமளவான கழிவுப்பொருட்களும் மாநகரசபையினால் அகற்றப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்,
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பருவகால மழை வீழ்ச்சிக்கு பிறகும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துவருவதன் காரணத்தினால் நுளம்பு பெருகும் இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிரமதான பணிகள் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுகாதார அலுவலக பிரிவுகளில் ஒவ்வொரு நாளும் நாளும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றார்கள்.இது அபகரிக்கின்ற அபாய நிலைகாணப்படுகின்றது.மழைக்கு பின்னர் இதன் அபாயத்தன்மை மிக அதிகமாக காணப்படுகின்றது.
மழைநீர் தேங்கி அதன்மூலம் டெங்கு நுளம்பு பெருகும் அபாயத்தினை குறைக்கும் வகையில் இன்றைய நாளில் மட்டக்களப்பு மாநகரசபை,வீதி அபிவிருத்தி அதிகாரசபை,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அனைவரும் இணைந்து வடிகான்களை சுத்தப்படுத்தும் பணியினை ஆரம்பித்திருக்கின்றோம்.
மிக முக்கியமாக பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாக தேவைப்படுகின்றது.கொள்கலன்கலை வடிகான்களுக்குள் போடுவது மற்றும் வீட்டு சூழலை டெங்கு நுளம்புகள் பரவும் இடமாக வைத்திருப்பதை தவிர்த்து பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமாக தேவைப்படுகின்றது.
இந்த அந்த செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்புத்தான் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு எங்களுக்கு உதவியாக அமையும்.
குடும்பத்தில் ஒருவர் வீட்டு சூழலை கண்காணித்து கொள்கலன் எதிலாவது நீர்நிரம்பியிருந்தால்,நுளம்புகள் பெருககூடிய இடங்கள் இருந்தால் தினமும் அவற்றினை சுத்தப்படுத்தவேண்டும்.
இதேபோன்று அரச நிறுவனங்கள்,அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் சுற்றுச்சூழலிலும் நுளம்பு பரவாத வகையில் கண்காணிப்பதற்கான குழுக்களை அமைத்து தினமும் கண்காணிப்புகளை மேற்கொள்ளவேண்டும். இந்த வெள்ள அனர்த்த காலங்களிலும் பரவ மழைக்கு பின்னரும் முக்கியமாக கடைப்பிடிக்கவேண்டிய விடயம்.