மயிலத்தமடு - மாதவனை வழக்கு – நீதிமன்றில் பண்ணையாளர்களுக்கு சாதகமான நிலை

மட்டக்களப்பு,மைலத்தமடு,மாதவனை பகுதியில் 617பேருக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை அரச தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த அனுமதியானது இம்மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவுபெற்றதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று கூறியதன் காரணமாக வழக்கு விசாரணை மேமாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பானவழக்கு இன்று (செவ்வாய்கிழமை) மேன்முறையீட்டுநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே எதிர்வரும் மே மாதத்திற்குவழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள்என அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது என தாம் வலியுறுத்தியதாகவும் அவர் மன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.