காத்தான்குடியை பாதுகாக்க உதவி காத்தான்குடி நகரசபை தவிசாளருக்கு நன்றி –கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

காத்தான்குடியின் நிலைமையினை வெளிப்படுத்தி தமக்கு பெரும் உதவி புரிந்த காத்தான்குடி நகரசபையின் தவிசாளருக்கு நன்றி தெரிவிப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தின் ஒரு சில வீதிகள் தவிர ஏனைய பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் நிலையினை நீக்குவதற்கான பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கினாலும் அபாய நிலை குறையவில்லையெனவும் பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 8503பேருக்கு கொரனா தடுப்பூசியேற்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

காத்தான்குடிக்கு தனிமைப்படுத்தல் முக்கியம் என்பதை அடையாளப்படுத்துவதற்கு காத்தான்குடி நகரசபை தவிசாளர் முகப்புத்தகம் ஊடாக வழங்கிய தகவலே பெரும் உதவியாக அமைந்ததாகவும் அதன் காரணமாகவே தாங்கள் விரைவாக சோதனைகளை முன்னெடுத்து அப்பகுதிகளை தனிமைப்படுத்தியதாகவும் இதன்காரணமாக சுகாதார துறையினருக்கு உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் டெங்கின் தாக்கமும் அதிகரித்துவருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடியில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கமானது குறைந்துள்ள நிலையில் ஒரு சில வீதிகளை தவிர ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையினை நீக்குவதற்கான பரிந்துரைகளை தேசிய கொரனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு தகவல் திணைக்களம் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையினை நீக்குவதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் ஆபத்தின் நிலை தொடர்ந்து காணப்படுவதாகவும் மக்கள் அவதானமாகவும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.