தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் 15ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இயற்கை வளங்களை பாதுகாத்தால் மட்டுமே இயற்கை எம்மை பாதுகாக்கும் என்னும் தொனிப்பொருளில் ‘மரம் நடுவோம் இயற்கையினை பாதுகாப்போம்’என்னும் மகுட வாசகத்துடன் இந்த திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளியில் இந்த திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கோப்பாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு,சுப்பர் கிங் இளைஞர் அமைப்பு என்பன இணைந்த இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது.
பசுமையான நாட்டினை கட்டியெழுப்பும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் நிகழ்வில் இளைஞர் யுவதிகள் மற்றும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நூறு மரக்கன்றுகள் இன்றைய தினம் கோப்பாவெளி பகுதியில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
இன்று மரங்கள் வெட்டப்பட்டு எமது காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக நாங்கள் எதிர்கால சந்ததிக்கு மரங்களை நட்டு காடுகளை மீளவழங்கவேண்டும் எனவும் இதன்போது பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.