பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் -தடையுத்தரவுகளை வழங்கும் பொலிஸார்


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அமைப்புகளுக்கான தடையுத்தரவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பொலிஸாரினால் வழங்கப்பட்டுவருகின்றது.

தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளை கண்டித்தும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலும் வடகிழக்கில் உள்ள பொது அமைப்புகள்,அரசியல் கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.

இதனை தடுக்கும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக தடையுத்தரவினை வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு ஆதரவு வழங்கியவர்கள்,ஊடகவியலாளர்களுக:கு இந்த தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தமிழ் உணர்வாளர்கள் அமைப்புக்கும் இன்றைய தினம் தடையுத்தரவு களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு இன்று தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ள அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் அவர்களுக்கும் தடையுத்தரவு வழங்குவதற்காக பொலிஸார் சென்றபோதிலும் அவர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று நாளைய தினம் ஏனைய இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளுக்கும் தடையுத்தரவுகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தினை அரசியல் சாயம் பூசியும் கொரனாவினை காரணம் காட்டியும் முடக்குவதற்கான செயற்பாடுகள் அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டங்களை சர்வாதிகாரமான முறையில் அடக்கும் செயற்பாடுகளை அரசு முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.