நெற்செய்கையில் கபிலநிற தத்தியை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விழிபூட்டல் நிகழ்வு


(ஆ.நிதாகரன்)   

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  மண்டூர் கமநல சேவை நிலைய  பிரிவில் விவசாய போதனாசிரியர் பி.பிரமேந்திரா தலைமையில் நெற்செய்கையில் தாக்கம் விளைவிக்கும் கபிலநிற தத்தியை  முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விழிபூட்டல் நிகழ்வு இன்று(29) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா பேராதனை பயிர் பாதுகாப்பு பிரிவின் உதவி விவசாய பணிப்பாளர் திரு.ஜெயசுந்தர போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் மண்டூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நெற்செய்கையில் ஒவ்வொரு போகத்திலும் பாரிய சேதத்தை விளைவிக்கும் கபிலநிற தத்தியை எவ்வாறு இனங்காண்பது, தாவரத்தில் காணப்படும் தத்திகளின் எண்ணிக்கைக்கேற்ப எவ்வாறு கட்டுப்பாட்டு இரசாயனங்களை பாவிப்பது பற்றியும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஆரம்ப தாக்க நிலைமையின் போது இரசாயன விற்பனை நிலையங்களின் ஆலோசனையை பின்பற்றி மட்டும் தொகுதி பூச்சி நாசினிகள் விசிறுவதனால் இயற்கை எதிரிகளாக கபில நிற தத்தியின் முட்டை அணங்கு பூச்சி என்பவற்றை அழிக்கும் மற்றும் பயிர்களுக்கு நன்மை பயக்கும் உயிரினங்கள் அழிவதால் தாக்கம் சடுதியாக அதிகரிக்கும்.

எனவே பொருத்தமான அவதானிப்பு மற்றும் பொருத்தமான இரசாயனங்களை விவசாய போதனாசிரியர்களின் ஆலோசனைப்படி விசிறி இத்தாக்கத்திலிருந்து விடுபடுவது பற்றி நெல் வயலில் செயற்பாட்டு ரீதியான விளக்கங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.