பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பினை நிறைவடைந்தது.
வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள்,தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை 10.00பொத்துவில் நகரில் ஆரம்பமான மேற்படி போராட்டமானது அம்பாறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளைத்தாண்டி மட்டக்களப்பினை வந்தடைந்துள்ளது.
இந்த போராட்டத்தின்போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களை பல இடங்களில் பொலிஸ் தடைகளை ஏற்படுத்திய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற தடையுத்தரவினை காண்பித்து ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்துசெல்லுமாறும கூறியபோதும் பேரணியில் சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.
இதன்போது பேரணியில் சென்றவர்களின் பதாகைகளை கிளித்தெறிந்ததுடன் பேரணியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கும் முற்பட்டபோதிலும் அவற்றினையெல்லாம் தாண்டி துணிச்சலுடனும் எழுச்சியுடனும் பேரணி மட்டக்களப்பு நோக்கிசென்றது.
பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்தியபோதிலும் அவற்றினையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பொத்துவிலில் தொடங்கிய பேரணியானது தாண்டியடி,கோமாரி,திருக்கோவில்,தம்பிலுவில்,அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை,பாலமுனை,நிந்தவூர்,காரைதீவு,சாய்ந்தமருது,கல்முனை,பாண்டிருப்பு,பெரியகல்லாறு ஊடாக களுவாஞ்சிகுடியை சென்றடைந்தது.பின்னர் அங்கிருந்து பேரணியானது தாழங்குடாவினை சென்றடைந்தது.
இந்த பேரணியானது பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் சுமார் 100கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்தது.
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு,
மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது,தமிழ் முஸ்லீம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ,சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கி வருகைதந்தபோது அதற்கு ஆதரவாக பெருமளவான முஸ்லிம்களுமு; இணைந்துகொண்டனர்.
முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர்,முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாள ஹசன் அலி உட்பட பெருமளவான முஸ்லிம்கள் இதில் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை தொடக்கம் மருதமுனை வரையில் முஸ்லிம்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்ததுடன் சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்களையும் எழுப்பினர்.
இந்த போராட்டம் நாளை மட்டக்களப்பில் ஆரம்பமாகி திருகோணமலை தென்னமரவாடியை சென்றடைந்து யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளதாக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்தன.
இந்த போராத்தில் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் மாவட்ட தலைவர்களான எஸ்.சிவயோகநாதன்,வேலன் சுவாமிகள்,அருட்தந்தை ரொஹான்,அருட்தந்தை ரொமேஸ்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,காணாமல்போனவர்களின் உறவினர்கள்,பண்ணையாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன்,சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,கலையரசன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சி பிரதிநிதிகள்,உணர்வாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.