திக்கோடையில் யானையின் அட்டகாசம் -பெண் ஒருவர் படுகாயம்


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

திக்கோடை புதிய 50 வீட்டுத்திட்ட கிராமத்தில் இன்று காலை தனது வீட்டுக்கு அருகாமையில்  தாயும் தனது மகளும் வெளியில் செல்லும்போது காட்டு யானை துரத்தி வந்து தாக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த தாயார் அயலவர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது திருமேனி தமிழ்மலர் 43 வயது  மூன்று பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுத் திட்டங்களை சுற்றி அடர்ந்த காடுகளும் இருப்பதனால் மக்கள் வசதிகள் இன்றி கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானையானது  ஒவ்வொரு நாளும் வருவதாகவும் தினமும் இரவு,பகல் வேளைகளில் அச்சத்துடனேயே வசித்துவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.