ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு சிவில் அமைப்புகள்,பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை


யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள்,பல்சமயங்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை அவர்கள் முன்வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,அதன் செயலாளர் இ.கலைவேந்தன்,உறுப்பினர் ஆர்.பாரதிதாசன்,மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கே.சிவபாலன் குருக்கள்,முகமட் இக்பால்ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டதற்கு கடும் கண்டத்தினை தெரிவித்துள்ள அவர்கள்,இது ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலான விடயம் எனவும் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி உடைக்கப்பானது தமிழ் மக்கள் மத்தியில் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது,யுத்ததில் உயிரிழந்த தமது உறவுகளின் ஆற்றுப்படுத்தலுக்காக இவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது உடைக்கப்பட்டதானது பாதிக்கப்பட்ட சமூகத்தின் மனநிலையில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நடக்ககூடாது,உடைக்கப்பட்ட தூபி அதேயிடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இந்த நிலையினை கருத்தில்கொண்டு நாளை 11ஆம் திகதி காலை தொடக்கம் மாலை வரையில் பல்கலைக்கழக மாணவர்கள்,தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் அழைப்புக்கு விடுக்கப்பட்டுள்ளது இதற்கு அனைவரும் தமது ஆதரவினை வழங்கி அதனை நடைமுறைப்படுத்தி எமது வலுவான எதிர்ப்புகளை இந்த அரசாங்கத்திற்கு காட்டுவதன் மூலம் அநாகரிமான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக அனைவரும் தாங்களாகவே முன்வந்து ஆதரவு வழங்கவேண்டும்.