யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் இராணுவ தளபதி போன்று செயல்பட்டுள்ளார்! பா.அரியநேத்திரன் மு.பா.உ


யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் இராணுவதளபதி போன்று செயல்பட்டுள்ளார் என்ற சந்தேகம் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இராணுவ ஆட்சியின் துணை வேந்தராக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் செயற்படுகின்றாரா? என்கிற பாரதூரமான சந்தேகம் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டு இருக்கின்றது.
இடித்து அழிக்கப்பட்ட இந்த நினைவுத்தூபி இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. விரிவுரையாளர்களும் மாணவர்களும் சேர்ந்து உருவாக்கினார்கள். போரால் இறந்த மக்களுக்கு உலக நாடுகளில் எல்லாம் நினைவுத்தூபிகள் இருக்கவே செய்கின்றன. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ வந்தது முதல் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தேச்சையாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் இராணுவ ஆட்சியின் துணை வேந்தராக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செயற்படுகின்றாரா? என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. உரிய அனுமதி பெறப்படாமல் இந்நினைவு தூபி அமைக்கப்பட்டு இருந்தால் இதை இடித்து அகற்ற வேண்டிய தேவையே கிடையாது. மாறாக அனுமதியை பெறுவதற்கான முன்னெடுப்புகளையே துணைவேந்தர் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இராணுவ பாணியில் நடந்து இருக்கின்றார். அழிக்கப்பட்ட இடத்தில் நினைவு தூபியை மீண்டும் அமைத்து தருவதன் மூலம் பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்று அவரை கேட்டு கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார். அத்துடன், விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவரின் மற்றைய பெயரை நான் பாவிப்பதில்லை. கடந்த கால விடுதலை போராட்ட காலங்களில் செயற்பட்டு இயக்கத்தை இரண்டாக பிரிப்பதற்கு காரணகர்த்தாவாக செயற்பட்டவர். எமது அம்பாறை மாவட்டத்தில் கப்பலில் சென்று தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தவர். அவர் கிளிநொச்சிக்கு சென்று ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றார். நானும் எல்லா அரசியல் வாதிகளுடனும் கதைத்திருக்கின்றேன். மாவை சேனாதிராஜாவுடன் உறவு வைத்துள்ளேன் என கூறியுள்ளார். கதைப்பது என்பது வேறு உறவு என்பது வேறு. இவ்வாறு அரசியல் வாதிகளுடன் கதைப்பதற்காக உறவு என்று சொல்ல முடியாது. ஏற்கனவே இவர் பிரதி அமைச்சராக இருந்துள்ளமையினால் கதைத்திருக்கலாம். இவ்வாறானவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைப்பதென்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த 2001 ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
நானும் மூலகர்த்தாவாக இருந்தேன் என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியில் விடுதலை புலிகளில் இருந்து பிரிந்து சென்று, அவர்களை காட்டி கொடுத்துவிட்டு ஒரு உன்னத போராட்டத்தை சிதைத்துவிட்டு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வருவதாக இருந்தால் அது அவரது விருப்பம். ஆயினும் கட்சியில் உள்ள தலைமைகள் அதில் சிந்தித்து முடிவெடுக்கும். இவருக்கு அரசாங்கத்துடன் சம்பந்தம் உள்ளது. விடுதலைப்போராட்டத்தை காட்டி கொடுத்துவிட்டு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவகத்தை உடைத்தமை தொடர்பில் உறுதியாக கூற முடியாது. 

சிலநேரம் ஆலோசனை அரசாங்கத்திற்கு இவர் கூறி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.