14திகதி வரை கடைகள் மூடவும் பாடசாலைகளை திறக்கவும் மட்டக்களப்பில் தீர்மானம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களைப் பூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இத்தோடு 25 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கல்வி நடவடிக்கைக்கு நாளை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: ‘நாளை அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் திறப்பது சம்பந்தமாக ஏற்கனவே கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட வலயக்கல்வி பணிப்பாளர்களை அழைத்து கூடியபோது அதற்கிணங்க தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் இன்று கல்வி நடவடிக்கைகளுக்குத் திறக்கப்படும்.

இதேவேளை தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் அதிகமாக பொதுமக்கள் கூடும் வாய்ப்புள்ளதால் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்துள்ளது.

இதனைக்கருத்தில் கொண்டு இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை மருந்தகம், பொதுச்சந்தை, உணவகங்கள் ஆகியவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், உணவை பொதி செய்து எடுத்துச்செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.