மூன்று தினங்களுக்குள் வெளியேறுமாறு கால்நடை பண்ணையாளர்களுக்கு மிரட்டல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்கம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தியது.

இந்த ஊடக சந்திப்பில் என மட்டக்களப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.நிர்மலன் உட்பட கால்நடை பண்ணையாளர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட கமநல கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்க தலைவர் எஸ்.நிர்மலன்,

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் படும் துயரங்களை நாங்கள் பல தரப்பின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதிலும் எங்களுக்கு எந்தவிதமான தீர்வும் இதுவரையில் கிடைக்கவில்லை.

29-10-2020அன்று கிழக்கு மாகாண ஆளுனர் எமது பகுதிக்கு வருகைதந்து எமது பகுதிகளை பார்வையிட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையினையும் பார்வையிட்டார்.கடந்த 02ஆம் திகதி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்கள்,ஆனால் இதுவரையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.ஒரு தடைவ 500 ஏக்கர் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.ஆனால் அங்கு அவ்வாறில்லாமல் மாடுகள் வளர்க்கப்படும் இடங்கள் அனைத்தும் உழவு அடித்து பயிர்செய்கின்றார்கள்.அங்கு எங்களது மாடுகளுக்கும் எங்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கின்றார்கள்.

ஒரு எருமை மாட்டினை உழவு இயந்திரத்தினால் அடித்து கொலைசெய்தார்கள்,நேற்று மாடுகளை வெட்டினார்கள்.இரவு நேரங்களில் பண்ணையாளர்களின் வாடிகளுக்கு வந்து அச்சுறுத்துகின்றனர்.இது தொடர்பில் அரசாங்க அதிபர்,பொலிஸார் உட்பட அனைவருக்கும் அறிவித்திருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்று காலை கத்தி,கோடாரியுடன் வந்தவர்கள் மூன்று நாட்களுக்குள் மாடுகளை எடுத்துக்கொண்டு மட்டக்களப்புக்கு செல்லுமாறு சிலர் மிரட்டினர்.நாங்கள் வேறு மாவட்டங்களுக்குள் மாடுகளை மேய்க்கவில்லை.நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள்ளேயே மாடுகளை மேய்க்கின்றோம்.அதனை மட்டக்களப்புக்கு கொண்டுசெல்லுங்கள் என்றால் நாங்கள் எங்கு கொண்டுசெல்வது,கச்சேரிக்குள்ளா கொண்டு மாடுகளை கட்டுவது.

நாங்கள் இந்த மாடுகளை நம்பியே சீவியம் நடத்துகின்றோம்.அம்பாறை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அங்கு காணிகள் நிறைய உள்ளது.அதனைவிடுத்து நாங்கள் மாடு மேய்க்கும் பகுதிக்குள் வந்துதான் உழவு செய்து சோளம் செய்கை நெற்செய்கை முன்னெடுக்கின்றனர்.இது தொடர்பில் அனைவரும் பாராமுகமாகவே இருந்துவருகின்றனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ,பிரதமரும் எங்களது பிரச்சினைகளை தீர்த்துதரவேண்டும்.அப்பகுதியில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள ஆகிய மூன்று இனங்களை சேர்ந்தவர்களும் மாடுகளை வளர்க்கின்றனர்.அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது எங்களுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.அடிக்கடி மாடுகள் சுடப்படுகின்றது,வெட்டப்படுகின்றது. இன்று இரவு வேளைகளில் குறித்த பகுதிகளில் உள்ள வாடிகளில் தங்குவதற்கு அச்சமாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை காணிகளில் எவ்வளவோ சட்டவிரோதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.அதனை யாரும் கவனத்தில் கொள்வதில்லை.காடுகளை அழிக்கின்றார்கள்,மாடுகளை கொல்கின்றார்கள்,புதையல் தோண்டுகின்றார்கள்.

மகாவலியில் இருந்துவருகின்றோம் என்று எங்களை மிரட்டுகின்றார்கள்.ஆனால் அவர்களிடம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் இருந்துவருகின்றோம் இங்கிருந்துசெல்லுங்கள் என்கின்றனர்.நீங்கள் உங்கள் அடையாளத்தினை நிரூபியுங்கள் என்றால் அவர்களிடம் எதுவும் இல்லை.

மூன்று தினங்களுக்குள் மேய்ச்சல் தரை பகுதிகளில் உள்ள மாடுகளை அப்புறப்படுத்தவேண்டும் என அப்பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களினால் தாங்கள் மிரட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் 991பண்ணையாளர்கள் இருக்கின்றோம்.அவர்களை நம்பி 2500 உதவியாளர்கள் இருக்கின்றனர்.ஒருநாளைக்கு நாங்கள் மட்டும் அரசாங்கத்தின் பால்கூட்டுத்தாபனமான மில்கோவுக்கு ஒரு நாளைக்கு 6000லீற்றர் பால் வழங்குகின்றோம்.நெஸ்லே நிறுவனத்திற்கு 3000 லீற்றர் வழங்குகின்றோம்.500லீற்றர் தயிர் விற்பனை செய்கின்றவர்கள் கொள்வனவு செய்கின்றனர்.இவ்வாறான பல குடும்பங்கள் பண்ணையாளர்கள் வாழுகின்றனர்.இவர்களின் நிலைமையினை கருத்தில்கொண்டு ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் எமது பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உண்மையில் எங்களது பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கு எங்களுக்கு யாரும் உதவாத நிலையில் ஊடகவியலாளர்கள் தான் எமது பிரச்சினையை கொண்டுசென்றனர்.காட்டுக்குள் இருக்கும் எங்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டுவந்தனர்.இன்று அவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

நாங்கள் எங்கள் பிரச்சினைகளை பாதுகாப்பு தரப்பினர் இருந்து அனைவரின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளோம் ஆனால் அது தொடர்பில் யாரும் கவனம் செலுத்தாத நிலையே இருந்தது.