மட்டக்களப்பின் முன்னோடி மறைந்தது – தமிழினத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு


ஈழத்தின் மூத்த கலைஞராகவும் கிழக்கு மண்ணில் 68 ஆண்டுகளுக்கு மேலாக கலை இலக்கிய உலகில் இயங்கிவந்தவரும் கூத்துக்கலையின் முன்னோடிகளில் ஒருவருமான முனாகானா என அழைக்கப்படும் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று காலமானார்.

மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த இவர் தனது 96வது வயதில் இன்று காலமானார்.

ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். ஆரையூர் கவின்கலை மன்றத்தின் தலைவராகவும், இந்துசமயக் கலாச்சார அமைச்சின் மதியுரைக்குருவாகவும் விளங்கியுள்ளார். 

இவரது லெச்சுமி கலியாணம் எனும் நாட்டுக்கூத்து கொழும்பிலும் பிற இடங்களிலும் பல தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது.  பாரம்பரியக் கலைகளான ஊஞ்சல் பாடல், காவியப் பாடல், காவடிப்பாடல், கொம்பு முறிப்பாடல், கிராமியக் கவிகள் முதலானவற்றில் மிகுந்த ஈடுபாடும் பாண்டித்தியமும் உள்ளவர். 

தாலாக்கோலம், புழுகுப்புராணம் முதலான தலைப்புகளில் தினகரனில் 1948 களில் வெளியான இவரது தொடர் கவிதைகள் இவரது சமூக அரசியல் பார்வையினையும் அதனை காஸ்யப்பண்போடு வெளிப்படுத்திய முறைமையும் இவரை ஒரு அசாதாரண கவிஞராக, கலைராக கலையுலகிற்கு அடையாளப்படுத்தியது. கலைமணி, கலைமாமணி, கலையரசு, மக்கள் கவிமணி, கலைஞாயிறு, கலைஞான வித்தகர், கலாபூசணம், ஆளுநர் விருது, தலைக்கோல் விருது போன்ற விருதுகள் இவரால் கௌரவம் பெற்றன.

இவரது இறுதிக்கிரியைகள் நாளை பிற்பகல் 3.00மணியளவில் ஆரையம்பதியில் நடைபெறவுள்ளது.

இவரின் மறைவுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் முன்னாள் பிடாதிபதி பால.சுகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அனுதாப செய்தியில்,

பல்துறை ஆற்றலாளன் எனும் தொடருக்கு பொருத்தமான ஆளுமையாளன் நம் முனாகனா.

இன்று கூத்து மீளுருவாக்கம் பேசுவோர் சிம்மாசனம் காண முன்பே அறுபதுகளில் கூத்தில் சமூக உள்ளடக்கத்தை பேசி கூத்து வரலாற்றில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியவர் 

பாரம்பரியமான அறிவும் பட்டயத் திறன் மிக்க படிப்பறிவும் வாய்க்கப் பெற்றவர் ஆசிரியராய் தன் அறிவார்ந்த செயல்பாடுகளால் ஆற்றல் மிக்க மாணவர்களை உருவாக்கிய பெரு மகன் அவர். வடமோடி,தென்மோடி,வசந்தன் என பாரம்பரியமான கிழக்கின் தனித்துவம் பேசும் கூத்து முறைகளின் எல்லா முகமும் அறிந்தவர்.

பாரம்பரியக் கூத்துகள் ,நவீனகூத்துகளை  அரங்கேற்றி மட்டக்களப்பு முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்.நவீன நாடகங்களை மேடையேற்றியதிலும் அவற்றில் நடித்தும் தன் திறனை வெளிப்படுத்தி  பன்முக ஆற்றலில் முத்திரை பதித்தவர்.

நாடறிந்த எழுத்தாளர் சிறுகதை கவிதை,பாடல்கள் ஆய்வுக் கட்டுரைகள் என எழுத்தின் பன்முகத்திலும் தடம் பதித்தவர்.கலாபூசணம் ,வடக்குகிழக்கு மாகாண இலக்கிய விருதுகள் என பல விருதுகளால் விருதுகள் பெருமை பெற்றன.

கிழக்குப் பல்கலைகழக நுண்கலைத்துறை தலைக்கோல் விருது கொடுத்த இனிய நினைவுகள் என்னுள் பதிந்து கிடக்கிறது.கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரயாளராக ஆன பின்பு மூனா கனாவுடனான அறிமுகம் ஏற்பட்டமையும் அவருடன் பழகக் கிடைத்தமையும் அவருக்கு தலைக்கோல் விருது கொடுத்து கௌரவிக்க கிடைத்த வாய்ப்பையும் பெரும் பேறாகவே கருதுகிறேன்.மூனாகனா எனும் மா கலைஞனுக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.