‘கிழக்கு மாகாணசபை விரைவில் நடாத்தப்படும்’


கிழக்கு மாகாணசபை தேர்தல் விரைவில் நடாத்தப்படும்,அதற்கான அழுத்தங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.விரைவில் கிழக்கு மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மாகாணசபை தொடர்பில் யார் எதனைக்கூறினாலும் மாகாணசபை தேர்தலை நடாத்துவதில் அரசாங்கம் தெளிவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆற்றல் பேரவையும் பிரதேச அபிவிருத்தி வங்கியும் இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வு இன்று ஆரையம்பதியில் நடைபெற்றது.

ஆரையம்பதி சிறுவர் பூங்காவில் ஆற்றல் பேரவையின் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம்,கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிழக்கு பிராந்திய விரிவாக்கல் பிரிவிற்கான முகாமையாளர் மற்றும் வங்கியின் முகாமையாளர்கள்,உத்தியோகத்தர்கள்,ஆற்றல் பேரவையின் உறுப்பினர்கள்,பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெருமளவான சிறுவர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் வறிய மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகங்களும் காசுகள் வைப்பிலிட்டு வழங்கப்பட்டன.

இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுவர்களுக்கான மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரசாந்தன்,

இன்று எங்கு பார்த்தாலும் வளப்பற்றாக்குறை காணப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பாடசாலை அதிபர் பேசும்போது தங்களுடைய பாடசாலைக்கொரு கலாசார மண்டபத்தை அமைத்துத் தரும்படி கேட்டிருந்தார். வகுப்பறைகளுக்கு பௌதீக வளங்களை பெற்றுத் தரும்படி கேட்டிருந்தார். தவிசாளர் பேசும்போது இந்தப் பிரதேசத்திற்கான சிறுவர் பூங்காவினை வலுவாக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இவங்றை நடைமுறைப்படுத்த வேண்டுமாகா இருந்தால் நிச்சயமாக எமக்குத் தேவையாக இருப்பது மாகாணசபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். 

2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சூழலில் கடந்த அரசாங்கம் இழைத்த மோசமான தவறின் காரணமாக, அந்த அரசுடன் இணைந்து இணக்க ஆட்சி நடத்திய தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை கொடுக்காததன் காரணமாக இன்றுவரை கிழக்கு மாகாணசபைத் தேர்தலானது நடத்தப்படாமல் நீண்ட காலமாக தள்ளிச் செல்கின்றது. 

நாங்கள் கடந்த வாரம் அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேசியிருந்தோம். மாகாணசபை தேர்தல் நடத்தப்படக்கூடாது, அது தேவையற்றது என பலரும் பல கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். யார் என்ன பேசினாலும் அரசாங்கம் மிகத் தெளிவாக இருக்கின்றது என நாம் நம்புகின்றோம். சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் மிகத் தெளிவாக இருக்கின்றது.

கிழக்குமாகாணசபை உள்ளிட்ட மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்துகின்றபோது தான் மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் வருகின்றபோதுதான் மாகாணத்திற்குரிய பாடசாலைகள்,வைத்தியசேவைகள், சிறுவர்களுக்கான நலனோம்பல் நடவடிக்கைகள், உள்ளுராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் என அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

ஆயுதப் போராட்டம், அகிம்சைப் போராட்டம் என எமது போராட்டத்திற்காக இலங்கையில் கிடைத்திருக்கின்ற ஆகக் குறைந்த எழுத்து மூலமான இந்த மாகாணசபை முறைமையையாவது பூரணமாக பயன்படுத்தி அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கான எமது அரசியல் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்காக மக்களின் தெரிவாக இருக்கின்ற சூழலில் மிக விரைவில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசிற்கு நாங்கள் அதற்கான அழுத்தங்களை கொடுத்திருக்கின்றோம். மிக விரைவில் தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. 

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் மக்கள் சேவை வந்ததன் பின்னர் எமது கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு எமது மக்களை வலுவாக்குகின்ற செயற்பாடுகளை தெடர்ந்து முன்னெடுப்போம். 

நாம் எமது பிள்ளைகளை வளர்க்கின்றபோது வைத்தியராக வரவேண்டும், பொறியியலாளராக வரவேண்டும்,சட்டத்தரணியாக வேண்டும், ஆசிரியராக வேண்டும்,விளையாட்டு உத்தியோகத்தராக வேண்டும் என்றெல்லாம் சொல்லி வளர்க்கின்றோம். அது உண்மையில் பாராட்டப்படக்கூடிய விடயமாகும். அதில் தவறில்லை. அதேபோன்று எமது பிள்ளைகள் எதிர்காலத்தில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும், நல்ல அரசியல் தலைவர்களாக சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்ற சிந்தனையையும் சொல்லிச் சொல்லி அவர்களை வளருங்கள். அவ்வாறு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காததன் காரணமாகவே 62வருடங்களாக போலித் தேசியம் பேசுகின்ற அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்து வாக்களித்து இன்று வாழ்வாதாரத்திற்காக வக்கற்று நிற்கின்றோம்.