சர்வதேச இருதய நோய் தினத்தினை முன்னிட்டு இரத்த அழுத்த பரிசோதனை


சர்வதேச இருதய நோய் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் அனைவரின் ஆரோக்கியத்தினையும் உறுதிப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள தொற்றா நோய் பிரிவின் ஏற்பாட்டில் அதன் பொறுப்பாளர் டாக்டர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்க பணிப்பாளர் டாக்டர் எஸ்.மயூரன் உட்பட வைத்திய நிபுணர்கள்,வைத்தியாகள்,மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தொற்றா நோய் தாக்கம் தொடர்பில் விரிவான கருத்துரைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் தொற்றா நோயின் தாக்கத்தினால் அதிகளவானோர் உயிரிழக்கும் நிலையேற்பட்டுவருவதாகவும் அதன் காரணமாக வைத்தியசாலைகளில் ஆரோக்கிய வாழ்வு என்னும் பகுதி திறக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் ஊடாக உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது பல்வேறு விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,உறுப்பினர்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன.