அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் வழங்கப்படவேண்டும் -ஜனா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது வெற்றிக்கு தோல்கொடுத்த அனைவருக்கும் இந்தவேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.நான் பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது.மிகவும்போராடியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வித்தியாசமான பாதையினை விரும்புகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது சென்றுகொண்டிருக்கின்ற பாதையில் ஓரு மாற்றம்வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவ கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் இருந்துவருகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரையில் இருக்கும் ஒரேயொரு கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இருந்துவருகின்றது.வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியில் உட்பட கிடைத்த பத்து ஆசனங்களில் மூன்று தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை ரெலோ கொண்டுள்ளது.

விரைவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் எமது நடவடிக்ககைள் குறித்தும் மக்கள் அதிகளவானோர் அபிவிருத்தியை விரும்புவதன் காரணமாக  அது தொடர்பிலும் கூடி ஆராய்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை அவசரமாக பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவினை கூட்டி அது தொடர்பில் ஆராயவேண்டும்.

தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை வேண்டி நிற்கும்வேளையில் வித்தியசமான முறையில் தமிழ் சிந்திக்கின்றனர்.அந்தவகையில் தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டிய தேவையுள்ளது.அந்தவகையில் தமிழீழ விடுதலை இயக்கம் கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்து அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமர்ப்பித்து அதற்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை எமக்கிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.1994ஆம் ஆண்டு இந்த நிலைமை ஏற்பட்டது.அதேநிலைமை இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஓரு தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைத்துள்ளது.அதனை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கும் ஆலோசனையினை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் வழங்குவோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் போராட்ட காலங்களில் பல வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள்.போராட்ட ரீதியாகவும்,இனரீதியாகவும் பல்வேறு வகையிலான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களாக உள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் கடந்த காலத்தில் இல்லாமல்செய்யப்பட்டுள்ளன.அந்த நிலைமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டு அம்பாறை மாவட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய அக்கரை செலுத்தவேண்டும்.அதேபோன்று எனது பாராளுமன்ற சேவையின் ஒரு பகுதி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.